Srilankan Tamil kings – The Tamils Who Ruled

 

July 6, 2018

Share on Facebook

Tweet on Twitter

 

இலங்கையின் வரலாறு

***********************
“தமிழர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இலங்கைக்குப் போனவர்கள்தானே! அவர்கள் தனிநாடு கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?” என்று இன்றும் பலர் கேட்கிறார்கள். அவர்கள் இலங்கையின் வரலாற்றை அறியாதவர்கள்.
இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள். இலங்கையின் “மண்ணின் மைந்தர்கள்”. தமிழ் மன்னர்கள் பலர் இலங்கையை ஆண்டிருக்கிறார்கள். இது வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மை.

குமரி முனைக்கு தெற்கே உள்ள இந்து மகா சமுத்திரம் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்றும், அது லெமூரியா (குமரிக்கண்டம்) என்று அழைக்கப்பட்டது என்றும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
“லெமூரியா கடலில் மூழ்கி விட்டது. அப்போது தமிழ்நாட்டுடன் இலங்கையும் ஒட்டிக் கொண்டிருந்தது. நாளடைவில் தனி தீவாகப் பிரிந்து விட்டது” என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடல் ஆழமின்றி இருப்பதற்கு இதுதான் காரணம்.

கிறீஸ்த்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் கௌதம புத்தர் பிறப்பதற்கு முன்னர் உருவாகிய அனுராதபுர நகரத்தின் வரலாற்றை 1200 ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 6ம் நூற்றாண்டின் வாழ்ந்த(சிலர் அவர் கிபி4ம் நூற்றாண்டில் வாழந்ததாகவும் கூறுவர்)மகாநாபர் என்ற தேரவாத பிக்கு எழுதிய மாகாவம்சம் என்ற சார்புநிலை நூலை வைத்துக்கொண்டு அது தங்களுக்கு மட்டுமே உரித்தான வரலாற்றுத் தலைநகரம் என்று சிங்களம் பெருமை பேசிக்கொள்கிறது.

இலங்கை தமிழர்களின் வரலாற்றை இந்து சார்பு நிலையில் இருந்து நிறுவ முற்பட்ட பெரும்பாலான நமது தமிழ் வரலாற்றாசிரியர்களும் அது பௌத்த நகரமாக இருப்பதால் சிங்கள பௌத்த நகரம் என்று ஒத்தூதி மகாவம்சத்துக்கு விளக்கவுரையும் பொழிப்புரையும் எழுதிவிட்டனர்

மகாவம்சம் கிமு 505 நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து (இன்றைய ஒரிசா மாநிலம்) விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைக்கு வந்ததில் இருந்;து பௌத்த சிங்களவர்களுடடைய வரலாறு தொடங்குவதாக சொல்கிறது.

விஜயன் வந்ததாக சொல்லப்படும் காலத்தில் இருந்து 1100 வருடங்களுக்குப் பின்னர் அது பற்றி மாகாநாபர் வெறும் மரபுக்கதைகளையும் செவிவழிக் கதைகளையும் அடிப்படையாக வைத்து எழுதி வைத்துள்ள புனைவை உண்மையான வரலாறு என்று நிரூபிப்பதற்கு எந்தவித ஆதரமும் இல்லை.

ஆதாரங்கள்

************
திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 15 மைல் தூரத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில், 1876-ல் பூமியைத் தோண்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், பலவகையான மண் பாண்டங்கள் கிடைத்தன. அவை சூளையில் நன்றாக வேக வைக்கப்பட்டு, நல்ல மெருகுடன் காணப்படுகின்றன. இறந்தவர்களின் உடல்களை வைத்து புதைப்பதற்கான “தாழி”கள் இவை. இதேபோன்ற “தாழி”கள், இலங்கையின் வடபகுதியிலும் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல, புராதன தமிழர்கள் உபயோகித்த பல நாணயங்கள், அரச இலட்சினைகள், முதலானவை இலங்கையின் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதற்கு இதுவே ஆதாரம் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், பழைய கற்காலத்திலும், புதிய கற்காலத்திலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் எத்தகைய நடை – உடை – பாவனையுடன் வாழ்ந்தார்களோ, அதே மாதிரிதான் இலங்கைத் தமிழர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். இருவருக்கும் ‘தொப்புள் கொடி’ உறவு இருந்திருக்கிறது.

மகிந்தர் இலங்கைக்கு வந்த போது அனுராதபுர நகரத்தை ஆட்சி செய்தவன் தேவநம்பிய தீசன்(கிமு 247 -; கிமு 207)

அவனுக்கு முன் பண்டுகாபன் (கிமு 437)

மூத்தசிவன் முதலான பல அரசர்கள் அந்த நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்திருக்கிறார்கள்.

அவர்கள் யாரும் பௌத்தர்கள் அல்ல.

மகாவம்சமும் அதற்கு முந்திய தீபவம்சமும் தரும் தகவலின்படி அவர்கள் மலையை வழிபடுவது கல்லை (சிவலிங்கம்) வழிபடுவது காட்டு மரங்களை வழிபடுவது வேள்வி நடத்துவது மிருங்களை பலியிடுவது என்று நாரிகமற்ற ஒழுங்கு படுத்தப்படாத வழிபாட்டு முறையை கடைப்பிடித்தார்கள்.

இது அந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் நிலவிய வழிபாட்டு முறையாகும்.வைதீக மயப்படுத்தலுக்கு உள்ளாக சிவ(லிங்க)வழிபாடும் நடுகல் வழிபாடும் தமிழர்கள் சிறப்பாக நிலவிய வழிபாட்டு முறைகளாகும்;.

அதே போல இறந்த உடல்களுக்கு சடங்குகளைச் செய்வது அவற்றை புதைத்துவிட்டு வணங்குவது முதலான மூடநம்பிக்கைகளைக் கொண்டிருந்தார்கள்.இதுவும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகத்தில் நிலவிய சடங்கு முறையாகும்.(உடலங்களை எரியூட்டுவதென்து ஆரியமயமாக்கலுக்கு பின்னர் வந்தது.)

வரலாறு கூறுவது என்ன?

*************************
இலங்கையில், புத்தமதம் பரவுவதற்கு முன் சிவ வழிபாடுதான் நடந்து வந்திருக்கிறது. பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சிவன் சிலைகளும், நந்தி சிலைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. சிவனை வழிபட்டவர்கள் தமிழர்கள்தான்; சிங்களர்கள் அல்ல.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் ஆட்சி புரிந்த மவுரிய பேரரசன் அசோகன், கலிங்கப் போரின் முடிவில் பவுத்த மதத்தைத் தழுவினார். அவர் புத்த மதத்தை பரப்புவதற்காக, மகிந்த தேரே என்ற புத்த மத குரு தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பினார். அக்குழு இலங்கைக்கு வந்தபோது, அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன் பெயர் திசையன் என்றும், அசோகன் விருப்பப்படி அவன் புத்தமதத்தை தழுவினான் என்றும், அவனுக்கு “தேவ நம்பி” என்ற பட்டத்தை அசோகர் வழங்கினார் என்றும், பாலி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 வருடங்கள், அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினார்கள் என்று அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று ராஜ்ஜியங்கள்

************************

ஆதிகாலத்தில், இலங்கை ஒரே நாடாக இருந்தது இல்லை. பல அரசர்களும், சிற்றரசர்களும் குறிப்பிட்ட பகுதிகளை ஆண்டு வந்தனர். ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வந்தபோது, இலங்கையில் மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன:
(1) தென் கோடியில், கொழும்பு பகுதியை உள்ளடக்கிய கோட்டை ராஜ்ஜியம். இந்த கோட்டையை ஏற்படுத்தியவனே அழகுக்கோன் என்ற தமிழன்.
(2) கண்டி ராஜ்ஜியம்.
(3) யாழ்ப்பாண ராஜ்ஜியம்.
இவற்றில் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை எக்காலத்திலும் சிங்களர்கள் ஆண்டது இல்லை. கோட்டையையும் கண்டியையும் தமிழர்களும், சிங்களர்களும் மாறி மாறி ஆண்டு வந்திருக்கிறார்கள்.

பல ராஜ்ஜியங்களாக இருந்த இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், இலங்கையையும் ஒரே நாடாக மாற்றினார்கள். சிலோன் (இலங்கை) என்ற பெயரையும் சூட்டினார்கள்.

இந்தியாவில் இருந்து சென்ற விஜயன் முதல் சிங்கள மன்னன்!
சிங்கள வரலாற்று நூல் கூறும் விசித்திர தகவல்கள்

**************************************************************

வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.
இந்தியாவின் இதிகாசங்களான “ராமாயணம்”, “மகாபாரதம்” போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட “மகாவம்சம்” என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள். இதை தங்கள் “வரலாறு” என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு.
இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் – இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது.
விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-
“வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!
பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார். சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)
இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார். விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான். அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். “விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்” என்று வற்புறுத்துகிறார்கள்.
இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, “எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்” என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.
விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது. விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.
(குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் “பேரழகு படைத்தவள்” என்று பொருள். இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, “மகாவம்சம்”)
குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள். இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.

பாண்டிய இளவரசி

*********************
விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான். “ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், சிம்மாசனம் ஏறமுடியும்” என்று கூறுகிறான்.
இதன் காரணமாக, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு செல்கிறார்கள். மதுரை மன்னனுக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார். பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.
குவேனியை அழைத்து, “நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு” என்று கூறுகிறான்.
இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு “லங்காபுரா” என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.
பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.
முன்பு கொடியவனாகவும், முரடனாகவும் இருந்த விஜயன் நல்லவனாக திருந்தி, 38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.”
இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

தபால் தலை

**************

1956-ல் “விஜயனின் வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.
தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்” என்று கூறினார்கள்.
இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது!

இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்ட தமிழ் மன்னன்
வீர வரலாறு படைத்த எல்லாளன்

******************************

எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.
சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் “மகாவம்சம்.”
சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது.
இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
புகழ் பெற்ற தமிழ் மன்னன்
இலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர்.
இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன்.

சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட “மகாவம்சம்” நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன.
மகாவம்சம் கூறுவதாவது
எல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந்தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன்.
அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம்.
ஒருமுறை, ஒரு பெண் அந்த மணியை அடித்தாள். எல்லாளன் அந்தப் பெண்ணை அழைத்து, “உன் குறை என்ன?” என்று கேட்டான்.
“உன் மகன் ரதத்தில் செல்லும்போது, என் கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக் கொன்றுவிட்டான்” என்று கூறினாள்.
அதைக்கேட்ட எல்லாளன், தன் மகனையும் ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி இளவரசன் கொல்லப்பட்டான். (மனுநீதி சோழன் வரலாற்றிலும் இதே போன்ற சம்பவம் வருகிறது)
ஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான்.
உடனே மந்திரிகளை அழைத்து, “புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி; பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்’ என்றான்.அதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். “நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்” என்று கூறினர். “நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்” என்று தெரிவித்தார்கள்.
மந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான்.

துட்ட காமினி (துட்ட கைமுனு)

இந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.)
ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம்.
தன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. “எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்” என்று தகவல் அனுப்பினார்.
இதனால் சீற்றம் அடைந்த துட்ட காமினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான்.
இதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.
இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.
சில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான்.
பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன், மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.
துட்டகாமினியை கோட்டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவ செய்யப்பட்டது. அதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின. போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது.
இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்.
“நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்” என்றான்.
போர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.

இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது.
எல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான். அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான்.
“இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்” என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது.
அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.
ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.
இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

இலங்கை மீது கரிகால்சோழன் படையெடுப்பு
12,000 சிங்களவரை சிறைப்பிடித்தான்

**************************************

இலங்கை மீது கரிகால்சோழன் நடத்திய படையெடுப்பு முக்கியமானது.
சங்க காலத்தில் புகழ் பெற்று விளங்கிய சோழ மன்னர்களில் தலைசிறந்தவன் கரிகால்சோழன்.

படையெடுப்பு

****************
அவன், இலங்கை மீது படையெடுத்தான். அங்கு ஆண்ட சிங்கள மன்னனை முறியடித்தான். தன் வெற்றிக் கொடியை பறக்கவிட்டான்.
கல்லணை
பின்னர் 12,000 சிங்களவர்களைச் சிறைப்படுத்தி தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தான். அவர்களைப் பயன்படுத்தி, திருச்சிராப்பள்ளி அருகே, காவிரியின் குறுக்கே “கல்லணை”யை கட்டினான். உலகத்திலேயே மிகப் பழமையான அணைக்கட்டாக “கல்லணை” விளங்குகிறது.

கஜபாகு

*********

கரிகாலன் படையெடுப்பின்போது, சிங்கள இளவரசன் கஜபாகு சிறுவனாக இருந்தான். (கஜபாகு என்றால், யானையைப் போன்ற கைகளை உடையவன் என்று பொருள்)
அவன் கி.பி.112 -ம் ஆண்டில் இலங்கை அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.
அவன் ஒருநாள் நகர சோதனைக்குச் சென்றபோது, ஒரு வீட்டில் விதவைப் பெண் ஒருத்தி உரத்த குரலில் அழும் சத்தம் கேட்டது. அந்தப் பெண்ணை கஜபாகு சந்தித்து, “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டான்.
“பல ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னன் ஒருவன் இலங்கை மீது படையெடுத்தான். அந்த சோழ மன்னன், சிங்களவர் பலரைச் சிறைப்பிடித்து, தமிழ் நாட்டில் அணை கட்டுவதற்காக அழைத்துச் சென்றான். அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வரவேயில்லை. சோழனுடன் போன என் பிள்ளைகளும் திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்களோ என்று நினைத்து அழுதேன்” என்றாள், அந்த பெண்மணி.
இதைக்கேட்டு கஜபாகு ஆத்திரம் அடைந்தான். கரிகால் சோழனைப் பழிவாங்குவதாக சபதம் செய்தான்.
பெரும் படை திரட்டினான். சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான்.
இதற்கிடையே கரிகால்சோழன் இறந்துவிட்டான்.
சோழப் படைகளுடன் கஜபாகு கடும் போர் புரிந்து, சிறை பிடிக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் சிங்களவர்களை மீட்டான். பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில், ஆயிரக்கணக்கான தமிழர்களை சிறை பிடித்து வந்து, இலங்கையில் குடியேற்றினான்.
இலங்கை மீது கரிகால்சோழன் படையெடுத்துச் சென்றது, வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்ச்சி. மற்றவை, “பூஜாவலி” என்ற இலங்கை நூலில் காணப்படும் தகவல்கள்.

கண்ணகி

**********
இந்த கஜபாகு, தமிழ்நாட்டுக்கு வந்து, “கண்ணகி விழா”வில் கலந்து கொண்டதாக, சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, இலங்கையில் கண்ணகிக்கு சிலை எடுத்து வழிபாடு செய்தான் என்றும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை, சிங்கள மன்னன் துட்டகைமுனு தோற்கடித்தான் அல்லவா? அதன்பின், அப்பகுதியை தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி அரசாண்டதாக வரலாறு கூறுகிறது. ஏழு தமிழ் மன்னர்கள் இவ்வாறு அங்கே ஆட்சி நடத்தியுள்ளனர்.

மணிமேகலை

****************
சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலை, இவளுடைய வரலாற்றை விவரிக்கும் “மணிமேகலை” காப்பியத்தில், பழங்கால இலங்கை பற்றி குறிப்புகள் வருகின்றன.
“மணிமேகலை, காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒரு பூங்காவில் மயக்கம் அடைந்து விழுந்தாள். மணிமேகலா தெய்வம், அவளை மணிபல்லவம் தீவுக்கு தூக்கிச்சென்றது.
(இலங்கையின் வடபகுதி அருகே, காரைதீவு என்ற தீவு உள்ளது. இந்தத் தீவுதான், பழங்காலத்தில் ‘மணிபல்லவம்’ என்று அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.)
அந்த தீவில் இருந்த பெரிய புத்தர் சிலையை மணிமேகலை வணங்கினாள். அருகில் ஒரு பெரிய பொய்கை இருந்தது. பௌர்ணமி நாளில் இதில் இருந்து ‘அமுத சுரபி’ என்ற அட்சய பாத்திரம் வெளிப்பட்டது. உணவை எடுக்க எடுக்க, தொடர்ந்து உணவு வந்து கொண்டே இருக்கக்கூடிய அதிசய பாத்திரம் அது.
அமுதசுரபியைக் கொண்டு, ஏராளமானவர்களுக்கு உணவளித்தாள் மணிமேகலை”.
இவ்வாறு மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது.

பல்லவர் படையெடுப்பு

**************************
இலங்கை மீது, நரசிம்மவர்மன் காலத்தில் நடந்த பல்லவர் படையெடுப்புப் பற்றிய விவரங்கள், தமிழக கல்வெட்டுகளில் உள்ளன.
தமிழகத்தில் கி.பி. 630 – 660 -ல் ஆட்சி புரிந்த நரசிம்மவர்மர் காலத்தில், இலங்கையில் இருந்து மானவன்மன் என்ற அரசன் அவரிடம் அடைக்கலம் கோரி வந்தான்.
இலங்கையில், மணி மகுடம் யாருக்கு என்று மானவன்மனுக்கும், அவன் சகோதரன் அட்டதத்தனுக்கும் போட்டி ஏற்பட்டது. இதில் தோல்வி அடைந்த மானவன்மன் இலங்கையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டான்.
மானவன்மன், நரசிம்மவர்மனிடம் தஞ்சம் அடைந்து, தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டான். அந்தச் சமயத்தில், சாளுக்கிய அரசன் புலிகேசி ஆண்ட வாதாபி மீது நரசிம்மவர்மர் படையெடுத்துச் சென்றார். அவருக்கு மானவன்மன் உதவியாக இருந்தான்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், மானவன்மனுக்கு உதவியாக ஒரு படையை இலங்கைக்கு நரசிம்மவர்மர் அனுப்பினார். ஆனால் அந்தப் படை முறியடிக்கப்பட்டது. தோல்வியுடன் மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தான், மானவன்மன்.
நடந்ததை அறிந்த நரசிம்மவர்மர், ஒரு பெரும் படையை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பினார். அந்தப் படையிடம் அட்டதத்தன் படை தோற்றது. மானவன்மன் இலங்கை அரசன் ஆனான்.

இராஜேந்திர சோழனிடம் தோற்றுப் போன சிங்கள மன்னன்
12 ஆண்டுகள் சிறை வைப்பு

*******************************

தமிழ்நாட்டின் வரலாற்றில் பொற்காலத்தைப் படைத்தவர்கள் இராஜராஜசோழனும் அவன் மகன் இராஜேந்திரசோழனும் ஆவார்கள். இவர்கள் ஏறத்தாழ இலங்கையை முற்றிலுமாக வென்று, சோழ ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக ஆக்கினார்கள்.
கி.பி. 982 -ம் ஆண்டில், ஐந்தாம் மகிந்தன் என்ற சிங்கள அரசன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன், சோழர்களுக்கு எதிரிகளான பாண்டியனுக்கும், சேரனுக்கும் உதவி செய்து வந்தான்.

படையெடுப்பு

*************

இராஜராஜசோழன்
எனவே, இலங்கை மீது படையெடுக்க சோழமன்னன் இராஜராஜசோழன் முடிவு செய்தார்.
தன மகன் இராஜேந்திர சோழன் தலைமையில் ஒரு பெரிய கப்பல் படையை அனுப்பி வைத்தார்.
தமிழ்ப் போர் வீரர்களுடன் கப்பல்கள் இலங்கையை சென்றடைந்தன.
போர்க் கப்பல்களைப் பார்த்து சிங்களவர்கள் மிரண்டனர். சோழர் படையை எதிர்க்க துணிவின்றி, மன்னன் மகிந்தன் இலங்கையின் இன்னொரு பகுதியான ரோகண நாட்டிற்கு தப்பி ஓடி விட்டான்.
சோழர் படை, இலங்கையின் வடபகுதியை கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பகுதிக்கு ‘மும்முடிச் சோழ மண்டலம்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.
தலைநகரமான அநுராதபுரம் அழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக பொலனறுவை புதிய தலை நகரம் ஆக்கப்பட்டது. அதற்கு ‘சனநாத மங்கலம்’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.
சிங்கள மன்னனின் கருவூலத்தில் இருந்த நகைகள், வைர மாலைகள், அரச அணிகலன்கள் முதலியவை கைப்பற்றப்பட்டன. உடைக்க முடியாத வாள் ஒன்று சோழர் வசமாகியது.

இரண்டாவது படையெடுப்பு

**************************
ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிய மகிந்தன், சும்மா இருக்கவில்லை. சோழருக்கு எதிராக பெரும்படை ஒன்றைத் திரட்டினான். இலங்கையில் சோழர்கள் கைப்பற்றிய பகுதியை மீட்கப் போர் தொடுத்தான்.
இதுபற்றி சோழ மன்னன் இராஜேந்திரனுக்குத் தெரிந்தது. அவன் கி.பி.1017-ம் ஆண்டில் மீண்டும் இலங்கை மீது படையெடுத்தான். இரு தரப்புக்கும் இடையே பெரும் போர் நடந்தது. சோழ படைகளின் தாக்குதலை, மகிந்தன் படைகளால் சமாளிக்க முடியவில்லை.
போரில் சோழர் படை வென்றது. சிங்களவர் படை தோற்றது.
மகிந்தனின் மணிமுடியும், அரசியின் மகுடமும் இராஜேந்திரனின் வசம் ஆகியது. அதுமட்டுமன்றி, 100 ஆண்டுகளுக்கு முன்னதாக, சிங்கள அரசனிடம் பாண்டிய மன்னன் பாதுகாப்பாக கொடுத்து வைத்திருந்த மணிமகுடத்தையும் இரஜேந்திர சோழன் கைப்பற்றினான்.

சிறையில் மகிந்தன்

*******************
போரில் தோற்றுப்போன மகிந்தன், சோழ வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு இராஜேந்திர சோழன் முன்பாக நிறுத்தப்பட்டான்.
இராஜேந்திரசோழன் தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது, மகிந்தனும் கொண்டு செல்லப்பட்டான். அங்கு சோழநாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான்.
12 ஆண்டு காலம் சிறையில் இருந்த மகிந்தன், சிறையிலேயே இறந்துப் போனான்.
மேற்கண்ட தகவல்கள், திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இராஜேந்திர சோழன் வெற்றியை குறிக்கும் கல்வெட்டு ஒன்று. கொழும்பு நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இன்னும் உள்ளது.
மகிந்தனை இராஜேந்திரசோழன் முறியடித்தது பற்றி, சிங்களஇர்களின் இரலாற்று நூலான “சூளவம்ச”த்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்தனின் மகன்

******************
இராஜேந்திர சோழனால் சிறைப் பிடிக்கப்பட்ட மகிந்தனுக்கு, காசிபன் என்ற மகன் இருந்தான். போர் நடந்தபோது அவனுக்கு வயது 12. அவனைச் சிங்களவர்கள் ரகசியமாக வளர்த்து வந்தனர்.
சோழ நாட்டுச் சிறையில் மகிந்தன் இறந்த பிறகு, காசிபனை தங்கள் மன்னனாக சிங்களவர்கள் அறிவித்தனர். சோழர்களை எதிர்க்க அவன் பெரும் படை திரட்டினான்.
இதை அறிந்த இராஜேந்திர சோழன், தன மகன் இராசாதிராஜன் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். கி.பி.1041-ல் நடைபெற்ற இந்தப் போரில் காசிபன் மாண்டான். சிங்களப்படை தோற்றுப்போய், சிதறி ஓடிற்று.
அதன்பின், கீர்த்தி என்ற சிங்கள மன்னன் சோழர்களுடன் போர் புரிந்து தோற்றுப் போனான். அதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் அவன் தற்கொலை செய்து கொண்டான்.

பராக்கிரமபாண்டியன்

*******************
பிற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் கால கட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர்.
கி.பி. 1255 -ம் ஆண்டு பட்டத்திற்கு வந்த ஜடாவர்மன் வீர பாண்டியன், இலங்கை மீது படையெடுத்து வெற்றி கண்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பரக்கிரமபாண்டியன் (கி.பி.1422 -61) இலங்கை மீது படையெடுத்து சிங்களவரை பல முறை வென்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
பிற்காலத்தில், விஜயநகர அரசர்களும் இலங்கையில் போரிட்டு சிங்களவரை வெற்றி கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு ஐரோப்பியர் வருகை
வியாபாரம் செய்ய வந்தவர்கள் நாட்டைப் பிடித்தனர்

**********************************************************

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் எப்படி சூழ்ச்சிகள் செய்து நாட்டைப் பிடித்தார்களோ, அதேபோல் இலங்கைக்கு வியாபாரம் செய்யப்போன ஐரோப்பியர்கள் தந்திரமாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
இலங்கைக்கு முதன் முதலாக வந்த ஐரோப்பியர்கள் போர்ச்சுகீசியர்கள். ஏறக்குறைய இந்தியாவுக்குள் போர்ச்சுக்கீசியர்கள் அடியெடுத்து வைத்த காலக்கட்டத்தில்தான் அவர்கள் இலங்கையையும் கைப்பற்றினர்.
கி.பி.1505 -ம் ஆண்டின் இறுதியில் போர்ச்சுகீசியர்கள் வந்த கப்பல் ஒன்று, புயலில் சிக்கியது. புயலில் திசை மாறி அந்த கப்பல் இலங்கையின் கடலோரப் பகுதியில் ஒதுங்கியது. அந்த கப்பலின் கேப்டன் பெயர் டாம் லூரங்கோ.
உள்நாட்டு குழப்பம்
அப்போது இலங்கையில் கோட்டை, சித்தவாகா, கண்டி, யாழ்பாணம் ஆகிய 4 ராஜ்ஜியங்கள் இருந்தன. இந்த 4 ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்களிடம் ஒற்றுமை இல்லை. உள் நாட்டுக் குழப்பங்கள் நிலவின.
முதலில் வியாபாரம் செய்வதே போர்ச்சுகீசியர்களின் நோக்கமாக இருந்தது. பின்னர், இலங்கையின் சூழ்நிலையைப் பார்த்த அவர்கள், “ஆட்சியைப் பிடிக்க இதுவே தக்க தருணம்” என்று தீர்மானித்தனர்.
அவர்களிடம் நவீன போர்க் கருவிகள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி, இலங்கையின் மேற்கு கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.
பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பகுதிகளிலும் ஊடுருவினர்.
தமிழ் மன்னன்
போர்ச்சுகீசியர்கள் இலங்கையில் கோட்டை ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிக் கொண்டபோது, யாழ்ப்பான ராஜ்ஜியத்தை ஜெகராஜசெகரன் என்கிற முதலாவது சங்கிலி (1519 – 1561) என்ற தமிழ் மன்னன் ஆண்டு வந்தான். யாழ்ப்பான அரசை கைப்பற்ற போர்ச்சுகீசியர்கள் பலமுறை முயன்றும் தோற்றுப் போனார்கள்.
முடிவில், “மன்னாரில் வியாபாரம் மட்டும் செய்து கொள்கிறோம்” என்று சங்கிலி மன்னனிடம் அனுமதி பெற்றனர். யாழ்பாணத்தில் இருந்து கொண்டு வியாபாரம் செய்து வந்த போர்ச்சுகீசியர்கள், தமிழரிடையே இருந்த சாதிப்பாகுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு, ஒரு பகுதியினரை தங்களோடு சேர்த்துக்கொண்டு, சங்கிலிக்கு எதிராக கலகம் செய்தனர்.
சங்கிலி அங்கு தன படையோடு சென்று கலகத்தை அடக்கினான். கலகத்துக்கு காரணமாக இருந்தவர்களின் தலையைத் துண்டித்தான்.
இதனால் ஆத்திரம் அடைந்த போர்ச்சுகீசியர்கள், யாழ்ப்பாண அரசை கைப்பற்ற தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
முதலாம் சங்கிலிக்குப் பிறகு இரண்டாம் சங்கிலி (1615 – 1619) ஆட்சிக்கு வந்தான். அப்போது, போர்ச்சுகீசியர்கள் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டனர். இதற்கு, பிதுறு பொட்டன்கோன் என்ற போர்ச்சுகீசிய பாதிரியார் தலைமை தாங்கினார்.

கடும் போர்
உள்நாட்டுக் கலவரத்தை ஒடுக்க இரண்டாவது சங்கிலி மன்னன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டான். தனக்கு உதவி செய்யுமாறு, தமிழ்நாட்டில் இருந்த ரகுநாத நாயக்க மன்னனுக்கு செய்தி அனுப்பினான். நாயக்க மன்னனும் வர்ண குலத்தான் என்ற தளபதி தலைமையில் 5,000 வீரர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தான்.
அதே சமயம், மன்னன் சங்கிலியை முறியடிக்க முறியடிக்க போர்ச்சுகீசியர்கள் படை திரட்டினர். கோட்டையில் இருந்து மன்னாரை நோக்கி நூறு போர்ச்சுகீசிய வீரர்களும், சில நூறு சிங்களக் கூலிப்படையினரும் அனுப்பப்பட்டனர்.
அதே நேரத்தில் தரை வழியாகவும் 130 போர்ச்சுகீசிய ராணுவ வீரர்களும், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிங்களக் கூலிப்படையினரும் யாழ்ப்பாணத்தை நோக்கி விரைந்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்தது. சிங்கள கூலிப்படையின் உதவியுடன் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியை போர்ச்சுகீசியர் தோற்கடித்து கைது செய்தனர்.

தூக்கு தண்டனை

இந்தக் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள கோவா நகரம் போர்ச்சுகீசியர் வசம் இருந்தது. அங்கு சங்கிலியை கொண்டு சென்றனர்.
சங்கிலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் தூக்கில் போடப்பட்டான்.

ஈழமன்னன் முதன் முறையாக அந்நியர்களான போர்ச்சுகீசியர்களிடம் தோற்றத்துடன், மரணத்தையும் தழுவ நேர்ந்தது. அதற்கு போர்ச்சுகீசியர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் சிங்களர்கள்.
இலங்கையின் மத்தியப் பகுதி, கிழக்கு கடற்கரைப் பகுதி ஆகியவை தவிர இலங்கையின் மற்ற பகுதிகள் போர்ச்சுகீசியர்கள் ஆதிக்கத்தின் கீழ் வந்தன.
ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளுக்கு போர்ச்சுகீசியர்களும், தாழ்ந்த பதவிகளுக்கு தமிழரும், சிங்களர்களும் அமர்த்தப்பட்டனர்.
சிங்களர்களையும், தமிழர்களையும் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டனர். பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தவர்களும், ‘கீழ்ச்சாதி’ என்று கருதப்பட்டவர்களும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினர்.
போர்ச்சுகீசியர்கள், இலங்கையின் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை. மிளகு, லவங்கப்பட்டை, பாக்கு போன்றவற்றையும், யானைகளையும் தங்கள் நாட்டுக்கு கொண்டு போயினர்.
“போர்ச்சுகீசியர்கள் ஆட்சி காலத்தை இருண்ட காலம்” என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

போத்துக்கீசரை விரட்டி அடித்த டச்சுக்காரர்கள்
கண்டி அரசனை எமாற்றி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்

******************************************************************

போத்துக்கீசர்கள் வசம் இருந்த இலங்கையை, டச்சுக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.
கண்டி அரசனுக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்து, பிறகு அவனை ஏமாற்றி விட்டனர்.
டச்சுக்காரர்கள் வருகை
கி.பி. 1595-ம் ஆண்டு முதல், டச்சுக்காரர்கள் கீழ்த்திசை நாடுகளில் வணிகம் செய்யும் நோக்கத்தோடு கப்பல்களில் பயணம் செய்தனர். (இங்கிலாந்து நாட்டுக்கு கிழக்கே, ஜெர்மனிக்கு மேற்கே உள்ளது நெதர்லாந்து. இது, ஹாலந்து என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் டச்சுக்காரர்கள். டச்சு மொழி பேசுவதால், டச்சுக்காரர்கள் என்ற பெயர் வந்தது. இவர்களை, இலங்கையைச் சேர்ந்தவர்கள் “ஒல்லாந்தர்” என்று குறிப்பிடுகிறார்கள்).
1602-ம் ஆண்டு, டச்சுக் கப்பல் ஒன்று மட்டக்களப்புக்கு வந்தது. அதில் இருந்த டச்சு வியாபாரிகள், கண்டி அரசனைச் சந்தித்து அந்தப் பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி கோரினர்.
கண்டி அரசனுக்கு போத்துக்கீசர்கள் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. டச்சுக்காரர்களின் உதவியைப் பெற்று, போத்துக்கீசர்களை விரட்டலாம் என்று கண்டி மன்னன் எண்ணினான்.

ஒப்பந்தம்
டச்சுக்காரர்களின் கோரிக்கைக்கு கண்டி அரசன் இணங்கி, அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்த ஒப்பந்தம் கி.பி. 1638-ம் ஆண்டில் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தப்படி, இருவரும் சேர்ந்து போத்துக்கீசரை எதிர்த்தனர். அவர்களிடம் இருந்து பல பகுதிகளை மீட்டனர். அப்படி மீட்ட பகுதிகளை டச்சுக்காரர்கள் கண்டி அரசனிடம் கொடுக்காமல் அவனை எமாற்றி, தங்கள் வசம் வைத்துக் கொண்டனர்.
போத்துக்கீசர்களுக்கும், டச்சுக்காரர்களுக்கும் பல்வேறு இடங்களில் போர் நடந்தது. அதில் டச்சுக்காரர்கள் வெற்றி பெற்று, இலங்கை முழுவதையும் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். போத்துக்கீசர் இலங்கையை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர்.
இலங்கையின் பொருளாதாரம் முழுவது டச்சுக்காரர்களின் கைக்கு வந்தது. காப்பித் தோட்டங்களை பெரும் அளவில் ஏற்படுத்தினர்.
உற்பத்தியாகும் பொருள்களில் பெரும்பாலானவற்றை அவர்களே எடுத்துக் கொண்டனர்.

தோட்டத் தொழிலாளர்
தொன்று தொட்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வியாபாரத் தொடர்பு இருந்து வந்தது. டச்சுக்காரர்களின் ஆட்சியின்போது, அந்த வியாபாரம் குறைந்து போயிற்று.
இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்ய, முதன் முதலாக 10 ஆயிரம் இந்தியர்களை இலங்கைக்கு டச்சுக்காரர்கள் அழைத்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.

தமிழர்களின் நாடு
டச்சுக்காரர்கள் அரசாண்ட போது, இலங்கைக்கு வந்திருந்த அடிரியன் ரேலண்ட் என்ற ஆராய்ச்சியாளர், தமிழ், சிங்களம், மலாய் ஆகிய மொழிகளை அறிந்தவர்.
அவர் எழுதிய குறிப்புகளில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:-
“இத்தீவை விட்டுப் போவதற்கு முன் தமிழர் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் சிறிது கூறவேண்டும்.
இந்தத் தீவின் பெரும் பகுதியில் தமிழர்கள் வாழுகிறார்கள். இந்தப் பகுதி கைலாய வன்னியன் என்ற மன்னனால் ஆட்சி செய்யப்படுகிறது. இங்கு வாழும் மக்கள், சிங்களவரின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் அல்ல. டச்சுக்காரர்களின் ஆட்சிக்கும் உட்பட்டவர்கள் அல்ல.
கரை ஓரமாக உள்ள நிலம் அனைத்தும், இந்த மன்னனுக்கே உரித்தானது. கரை ஓரங்களில் வாழும் மக்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள். நீர்கொழும்பு பகுதிக்கு தெற்கே, தெய்வேந்திர முனைவரையுள்ள பகுதிகளில் சிங்கள மொழி பேசப்படுகிறது.”
இவ்வாறு அடிரியன் ரேலண்ட் கூறியுள்ளார்.
டச்சு ஆட்சியின்போது இலங்கை வந்த மற்றொரு ஆராய்ச்சியாளர் கிறிஸ்தோபர் சுவைட்சர். இவருடைய குறிப்புகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“மட்டக்களப்பு, காலி, திரிகோணமலை, மன்னார், யாழ்பாணம், அரிப்பு, கற்பிட்டி, நீர்கொழும்பு முதலான பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
வன்னி நாட்டில் உள்ள தமிழர்கள், சுதந்திரமாக ஆட்சி நடத்துகிறார்கள். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள், டச்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் உள்ளனர்.”
இவ்வாறு சுவைட்சர் கூறியுள்ளார்.

வெள்ளையர் வருகை

“வல்லவனுக்கு வல்லவன், வையகத்தில் உண்டு” என்பது போல, டச்சுக்காரர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வெள்ளைக்காரர்கள் (இங்கிலாந்து) இலங்கைக்கு 1795-ம் ஆண்டு மத்தியில் வந்து சேர்ந்தார்கள்.
“கிழக்கு இந்தியக் கம்பெனி” என்ற பெயரில், வியாபாரம் செய்ய இந்தியாவுக்கு வந்த வெள்ளையர்கள், பற்பல சூழ்ச்சிகள் செய்து, ராஜதந்திரங்களைக் கையாண்டு ஆட்சியைப் பிடித்ததுபோல, இலங்கையிலும் வியாபாரம் செய்யவே முதலில் வந்தனர்.
அந்தக் காலக்கட்டத்தில் டச்சுக்காரர்கள் போதிய பலத்துடன் இல்லை. வெள்ளையர்களிடம் பலம் வாய்ந்த ராணுவம் இருந்தது. எனவே, டச்சுக்காரர்களிடம் இருந்த பகுதிகளை அவர்கள் எளிதாக கைப்பற்றிக் கொண்டனர்.
1798-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி கொழும்பு நகரை வெள்ளையர் கைப்பற்றியதுடன், இலங்கையில் டச்சுக்காரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

வெள்ளையர்களை எதிர்த்து
‘பாயும் புலி’ பண்டாரகவன்னியன் வீரப்போர்

***********************************************

இலங்கையில், வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன், பண்டாரகவன்னியன்.
தமிழ்நாட்டில், வெள்ளையர்களை எதிர்த்து இறுதிமூச்சு உள்ளவரை போராடியவன் வீரபாண்டிய கட்டபொம்மன். அவனைப்போல, இலங்கையில் வெள்ளையரை எதிர்த்தவன் ‘பாயும் புலி’ பண்டாரகவன்னியன். முழுப்பெயர் குலசேகர வைரமுத்து பண்டாரகவன்னியன்.

தமிழர் ஆட்சி
யாழ்ப்பாணத்தை ஒட்டிய வன்னிப்பிரதேசத்தை பண்டாரகவன்னியன் ஆண்டு வந்தான்.
வடக்கே யாழ்ப்பாணம் பரவைக்கடலையும், தெற்கே அருவிஆற்றையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும், கிழக்கே திரிகோணமலையையும் எல்லையாகக் கொண்டது வன்னி ராஜ்ஜியம்.
பண்டாரகவன்னியனும், கண்டி தமிழ் மன்னன் விக்கிரம ராசசிங்கனும் நெருங்கிய நண்பர்கள்.
டச்சுக்காரர்களை விரட்டிவிட்டு, இலங்கையில் பல இடங்களை கைப்பற்றிக்கொண்ட வெள்ளையர்கள், பண்டாரகவன்னியனிடம் கப்பம் (வரிப்பணம்) கேட்டனர்.
தமிழ்நாட்டில், வெள்ளையருக்கு வரி கொடுக்க வீரபாண்டிய கட்டபொம்மன் மறுத்தது போல், பண்டாரகவன்னியனும் கப்பம் கட்ட மறுத்தான். கப்பம் கேட்டு வந்த வெள்ளையனை விரட்டி அடித்தான்.
வெள்ளையர்கள் விடவில்லை. 1797 -ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி எல்லிஸ் டொய்லி என்ற தளபதியை பண்டாரகவன்னியரிடம் அனுப்பி, கிஸ்தியை வசூலித்து வருமாறு கூறினார்கள்.

வெட்டி வீழ்த்தினான்
வெள்ளையர்கள் மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பி கப்பம் கேட்டதால், பண்டாரகவன்னியன் வெகுண்டான். எல்லிஸ் டொய்லி என்ற அந்த வெள்ளைக்கார தளபதியை வாளால் வெட்டி வீழ்த்தினான்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், வெள்ளையர்கள் கடும் கோபம் கொண்டனர். படைகளை திரட்டிக் கொண்டு, பண்டாரகவன்னியன் மீது போர் தொடுத்தனர்.
கற்பூரப்புல் என்ற இடத்தில் இருதரப்பு படைகளும் மோதின. பண்டாரகவன்னியன் ஆவேசத்துடன் வீரப்போர் புரிந்து, பல வெள்ளைக்கார வீரர்களை வீழ்த்தினான்.
தமிழ் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், வெள்ளையர் படை புறமுதுகிட்டு ஓடியது.

மீண்டும் போர்
ஆங்கிலேயர்கள், எப்படியாவது பண்டாரகவன்னியனை தோற்கடித்து விடவேண்டும் என்று பெரும் படை திரட்டினர்.
இதைத் தெரிந்து கொண்ட பண்டாரகவன்னியன், ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு கோட்டையை, 1803-ம் ஆண்டில் தாக்கினான். காப்டன் ரிபேக் தலைமையில் இருந்த வெள்ளையர் படைகளுக்கும், பண்டாரகவன்னியன் படைகளுக்கும் கடும் போர் நடந்தது.
பண்டாரகவன்னியன் வெற்றி பெற்றான். வெள்ளையர் படை பின்வாங்கி ஓடியது.

மும்முனைத் தாக்குதல்

வெள்ளையர் பண்டாரகவன்னியனை எதிர்க்க புதிய வியூகம் வகுத்தனர். யாழ்பாணம், மன்னார், திரிகோணமலை என்ற மூன்று இடங்களில் இருந்தும் வெள்ளையர்கள் ஒரே நேரத்தில் படையெடுத்துச் சென்று, பண்டாரகவன்னியனை தாக்கினர்.
வெள்ளையர்களின் படைகளுடன் ஒப்பிடும் போது, பண்டாரகவன்னியனின் படை மிகச் சிறியது. இருப்பினும், அஞ்சாமல் வீரப்போர் புரிந்தான்.
போரில் பண்டாரகவன்னியன் படுகாயம் அடைந்தான். அவனுடைய வீரர்கள், பனங்காமம் என்ற இடத்துக்கு பண்டாரகவன்னியனை தூக்கிச் சென்றனர். சிகிச்சை அளித்து குணப்படுத்த எவ்வளவோ முயன்றும் பலன் இல்லை.
1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பண்டாரக வன்னியன் உயிர் பிரிந்தது.

பண்டாரகவன்னியன் மாண்ட இடத்தில் ஒரு நடு கல் உள்ளது. அதில், “இந்த இடத்தில் பண்டாரகவன்னியனை கேப்டன் வான் டெரிபெர்க் தோற்கடித்தான்” என்று குறிப்பிட்டுள்ளது.

வெள்ளையர்கள் எழுதிய வரலாற்றில், பண்டாரகவன்னியனை ஒரு ‘கொள்ளைக்காரன்’ என்றே குறிப்பிடுகின்றனர்.
வீரப்பாண்டிய கட்டபொம்மனையும் இதேபோல கொள்ளைக்காரன் என்று அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
கட்டபொம்மனும், பண்டாரகவன்னியனும் சமகாலத்தவர். கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தேதி 17-10-1799.

கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னன்
வெள்ளையருடன் வீரப்போர் புரிந்த விக்கிரமராச சிங்கன்

*************************************************************

இலங்கையில் கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்கிரமராச சிங்கன். இவர் வெள்ளையர்களுடன் வீரப் போர் புரிந்தவர்.
விக்கிரமராச சிங்கன் ஆட்சிக்கு வந்தது, நாட்டை ஆண்டது, சிங்களரின் சூழ்ச்சிகளை முறியடித்து, வெள்ளையர்களுடன் போர் புரிந்தது எல்லாமே சினிமாகதைகளையும் மிஞ்சக் கூடிய நிகழ்ச்சிகளாகும்.
விக்கிரமராச சிங்கனுக்கு முன்னதாக கண்டியை ஆண்ட அரசர் பெயர் ராசாதி ராசசிங்கன். இவர் கி.பி.1780 – ம் ஆண்டு முதல் 1798 -ம் ஆண்டு வரை கண்டியை ஆண்டார்.
மன்னரின் வேதனை
இவருடைய கடைசி காலத்தின்போது, திரிகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு ஆகிய கரை ஓரப் பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இதனால் மனம் நொந்தார், ராசாதிராச சிங்கன். அவருக்கு இன்னொரு கவலையும் இருந்தது. அவருக்கு வாரிசு இல்லை! ‘எனக்கு ஒரு மகன் இருந்தால், வெள்ளையரை எதிர்த்துப் போராட பயிற்சி அளித்திருப்பேன் என்று ஏங்கினார்.
தனக்கு முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்த அவர், தன் முதல் மனைவியின் தம்பியான முத்து சாமி என்பவரை தன் வாரிசாக பிரகடனம் செய்தார். தனக்குப்பின் முத்து சாமிதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று அறிவித்தார்.
இதற்குபின், பின் சில நாட்களில் இறந்து போனார்.

மந்திரியின் சூழ்ச்சி
கண்டியின் மந்திரியாக பதவி வகித்தவன் பிலிமைத்தலா. இவன் சிங்களவன். மன்னன் இறந்ததும் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தான். மன்னன் தன் வாரிசாக முத்துசாமியை அறிவித்தது அவனுக்குப் பிடிக்கவில்லை.
மன்னர் இறந்ததும், அதிகாரத்தைக் கைப்பற்ற புதிய சூழ்ச்சி ஒன்றை அரங்கேற்றினான் பிலிமைத்தலா. மன்னனின் இரண்டாவது மனைவியின் தம்பி கன்னுசாமிதான் திறமையானவர், அவர்தான் மன்னராகத் தகுதி உடையவர் என்று அறிவித்தான். அப்போது (கி.பி.1798) புதுக்கோட்டையில் இருந்த கன்னுசாமியை கண்டிக்கு அழைத்துச்சென்று, ‘விக்கிரமராச சிங்கன்’ என்ற புதிய பெயரைச் சூட்டி, மன்னன் ஆக்கினான்.

பிலிமைத்தலாவின் இந்தத் திட்டத்திற்கு ஒரு பின்னணி உண்டு. ‘கன்னுசாமியை மன்னன் ஆக்கியதால். அவன் நம்மிடம் விசுவாசமாக நடந்து கொள்வான். நம் விருப்பப்படி எல்லாம் அவனை ஆட்டி வைக்கலாம். பிறகு அவனை கவிழ்த்து விட்டு, ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளலாம்’ – இதுவே மந்திரியின் திட்டம்.
அரசரின் மூத்த மனைவியும், அவளுடைய தம்பி முத்துசாமியையும் (வாரிசாக அறிவிக்கப்பட்டவர்) நாட்டை விட்டு துரத்தி விட்டான். அவர்கள் இருவரும், வெள்ளையரிடம் தஞ்சம் அடைந்தனர்.
வெள்ளையர்கள், அந்த இருவருக்கும் அடைக்கலம் கொடுத்து, யாழ்ப்பாணக் கோட்டையில் வைத்து பாதுகாத்து வந்தனர்.

வெள்ளையருக்கு தூது
நாட்கள் சென்றன. மந்திரி சொன்னபடி எல்லாம் விக்கிரமராச சிங்கன் கேட்க்கவில்லை. நீதியுடனும், நேர்மையுடனும் ஆட்சி புரிந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மந்திரி பிலிமைத்தலா, எப்படியாவது சீக்கிரத்தில் மன்னனாகி விடவேண்டும் என்று துடித்தான். அவனுடைய மூளை குறுக்கு வழியில் வேலை செய்தது. மன்னனை காட்டிக்கொடுக்கவும், வெள்ளையருக்கு துணைபோகவும் முடிவு செய்தான்.
கரையோரப் பகுதியில் முகாமிட்டிருந்த வெள்ளைக்கார அதிகாரிகளுக்கு தூது அனுப்பினான். “நீங்கள் கண்டியை கைப்பற்றிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்” என்று தெரிவித்தான். இது சம்பந்தமாக ஆங்கிலப் படைத் தளபதிகளுடன் ரகசியப் பேச்சு நடத்தினான்,
அவன் தெரிவித்த யோசனைப்படி கண்டியை முற்றுகை இடுவது என வெள்ளையர் முடிவு செய்தனர். மெக்டொவெல் என்ற ஆங்கிலப் படைத்தளபதி தலைமையில் மூன்றாயிரம் ராணுவ வீரர்கள் கண்டிக்கு வந்து முற்றுகை இட்டனர்.
வெள்ளையரை எதிர்க்க, அந்த சமயத்தில் போதுமான படைகள் கண்டி அரசரிடம் இல்லை. எனவே, பாதுகாப்பை கருதி அவர் ரகசியமாக தப்பிச்சென்றார். அங்குறாங்கோட்டை என்ற இடத்திற்குச் சென்று பதுங்கிக் கொண்டார்.
மன்னரைக் காணவில்லை என்ற தகவல் பரவியது. போர் செய்யாமலேயே வெற்றி பெற்று விட்டதாக வெள்ளையர்கள் கொக்கரித்தனர்.
முன்னாள் மன்னரால் தனது வாரிசு என்று அறிவிக்கப்பட்ட முத்துசாமி, வெள்ளையரிடம் அடைக்கலம் புகுந்திருந்தார் அல்லவா? அவர்தான் இனி கண்டி மன்னர் என்று, தளபதி மக்டோவல் 8-7-1803 அன்று பிரகடனம் வெளியிட்டார்.

ஏமாற்றம்
வெள்ளையர்கள் தன்னை மன்னன் ஆக்குவார்கள் என்று எண்ணியிருந்த மந்திரி பிலிமைத்தலா, ஏமாற்றம் அடைந்தான். வெள்ளைக்கார தளபதிக்கு ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பினான். “கண்டிக்கு என்னை மன்னன் ஆக்குங்கள். உங்களுக்கு உதவியாக இருப்பேன்” என்று அதில் தெரிவித்தான்.
இதற்கு வெள்ளைக்கார தளபதி பதில் அனுப்பினான். பிலிமைத்தலாவை மன்னனாக்க 3 நிபந்தனைகளை வெள்ளையர்களை விதித்தனர்.
(1) தலைமறைவாக இருக்கும் விக்கிரமராச சிங்கனை தேடிக் கண்டுபிடித்து வெள்ளையர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
(2) முத்துசாமியை, வன்னிப்பகுதிக்கு அரசனாக்க வேண்டும்.
(3) வெள்ளையர்களுக்கு சில பகுதி நிலங்களை கொடுக்க வேண்டும். கொழும்பில் இருந்து திரிகோணமலைக்கு சாலை போடத் தேவையான வசதிகளை செய்து தரவேண்டும்.
மேற்கண்ட மூன்று நிபந்தனைகளையும் வெள்ளையர் விதித்தனர். அதற்கு, பிலிமைத்தலா சம்மதம் தெரிவித்தான்.
இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

தலைமறைவாக இருந்த கண்டி மன்னன் திடீர் தாக்குதல்! வெள்ளையர்கள் சரணாகதி

********************************************************************************

வெள்ளையர்களின் கண்ணில் படாமல் பதுங்கியிருந்த கண்டி மன்னன் திடீரென்று மக்களைத் திரட்டிக் கொண்டு வந்து, வெள்ளையர் படையை தாக்கினான். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் திணறிப் போன வெள்ளையர்கள் சரணாகதி அடைந்தனர்.
வெள்ளையருக்கு அஞ்சி, அங்குறாங்கொட்டை என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த கண்டி மன்னன் விக்கிரமராசசிங்கன் சும்மா இருக்கவில்லை. அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் பயன்படுத்திக் கொண்டு, ரகசியமாகப் படை திரட்டினார்.
மந்திரி பிலிமைத்தலாவின் சூழ்ச்சியின்படி படையெடுத்து வந்த வெள்ளையர் படை மீது விக்கிரமராசசிங்கன் அதிரடி தாக்குதல் நடத்தினார். போருக்கு அவரே தலைமை தாங்கி, வெள்ளைக்கார படைகளை திணற அடித்தார்.
சரணாகதி
ஆங்கிலேயர்கள், மலேயாவைச் சேர்ந்த சில வீரர்களை கூலிப்படையாக அமர்த்தி, தங்களுக்கு சாதகமாக போர் புரிய ஏற்பாடு செய்திருந்தனர். போர் நடந்து கொண்டிருந்தபோது, இந்தக் கூலிப் படையினர் கண்டி ராஜாவின் வீரத்தைக் கண்டு மனம் மாறி அவர் பக்கம் சேர்ந்து கொண்டனர்.
ஆங்கிலேயப் படைகளை ஓட ஓட விரட்டினார் மன்னர். புறமுதுகிட்டு ஓடிய வெள்ளையர்கள், மன்னரிடம் சரண் அடைய முடிவு செய்தனர். சமாதானத்துக்கு அறிகுறியாக வெள்ளைக்கொடி பிடித்து, சரணாகதி அடைய தீர்மானித்தனர்.
அவர்களிடம் வெள்ளைக்கொடி இல்லை! ஒரு போர் வீரனின் தலைப்பாகையை வாங்கி, அதைப் பிரித்து, ஒரு மூங்கில் கம்பில் கட்டி, வெள்ளைக்கொடி போல மாற்றினார்! அதைப் பிடித்தபடி, மன்னர் விக்கிரமராச சிங்கனிடம் சென்று, நிபந்தனையின்றி சரணாகதி அடைந்தனர்.
சரணாகதி அடைந்த நாள் 26-5-1803 என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடன்பாடு
இதன் பின்னர், விக்கிரமராச சிங்கனுக்கும் ஆங்கிலேயத் தளபதிகளுக்கும் இடையே ஒரு சமரச உடன்பாடு ஏற்பட்டது.
(1) மேஜர் டேவியும், உயிர் தப்பிய ஆங்கிலேய வீரர்களும் திரிகோணமலைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும். மருந்து இல்லாத வெறும் துப்பாக்கிகளை மட்டும் அவர்கள் கொண்டு போகலாம்.
(2) இதுவரை வெள்ளையர்களின் பாதுகாப்பில் இருந்து வந்த முத்துசாமியை, வெள்ளையர்கள் அழைத்தச் செல்லலாம்.
(3) போரில் காயம் அடைந்த ஆங்கிலேய போர் வீரர்களை, மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்.”
மேற்கண்டவாறு உடன்பாடு ஏற்பட்டது.

மந்திரியின் ஏமாற்றம்

விக்கிரமராசசிங்கனை வெள்ளையர்கள் தோற்கடித்து விடுவார்கள், பிறகு தானே கண்டிக்கு மன்னனாகி விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த பிலிமைத்தலாவின் ஆசையில் மண் விழுந்தது.
இவனுடைய ரகசிய திட்டங்களும், சூழ்ச்சிகளும் கண்டி மன்னனுக்குத் தெரியாது. எனவே, அவனை தொடர்ந்து மந்திரியாக வைத்துக் கொண்டார்.
பிலிமைத்தலா இப்போது புதிய திட்டம் வகுத்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். நல்ல அழகி. அவளை விக்கிரமராசசிங்கனுக்கு திருமணம் செய்து வைத்தால், தான் சொன்னபடி எல்லாம் மன்னன் நடப்பான் என்று நினைத்தான்.
தன் மகளை மன்னன் முன் கொண்டுபோய் நிறுத்தினான். “இவள் என் மகள். அழகி மட்டுமல்ல; நற்குணங்கள் நிறைந்தவள். நீங்கள் இவளை மணந்து கொள்ள வேண்டும். நீங்கள் என் மருமகன் ஆனால், என்னைப்போன்ற பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது” என்று பசப்பு வார்த்தைகள் கூறினான். “இது முக்கியமான விஷயம். யோசித்து பதில் சொல்கிறேன்” என்றார், மன்னர்.

சிங்களனான மந்திரி தன் பெண்ணை மணமுடித்து வைக்க முன்வருகிறான் என்றால், அதன் பின்னணியில் எதோ சூது இருக்கிறது என்பதை மன்னர் புரிந்து கொண்டார்.
சில நாட்கள் கழித்து, மந்திரியை அழைத்தார். “பிலிமைத்தலா! உன் மகளை எனக்கு மணமுடித்து வைக்க நீ முன்வந்ததற்காக உனக்கு நன்றி கூறுகிறேன். ஆனால், நான் நன்கு யோசித்துப் பார்த்ததில், என் சுற்றத்தில் இதை விரும்பமாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டேன். எனவே, வேறு நல்ல மாப்பிளையாகப் பார்த்து, உன் மகளைத் திருமணம் செய்து கொடு. நானே முன்நின்று திருமணத்தை நடத்தி வைக்கிறேன்” என்றார்.
பிலிமைத்தலாவின் முகம் கறுத்து, தன் திட்டம் சுக்கல் சுக்கலாக நொறுங்கி விட்டதை எண்ணி மனம் உடைந்தான்.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே, தன்னுடைய உறவுப்பெண் ஒருத்தியை கண்டி மன்னர் மணந்து, அவளையே பட்டத்து ராணி ஆக்கினார்.
முக்கிய பிரச்சினைகளை எல்லாம் மன்னரே கவனித்தார். பிலிமைத்தலாவின் யோசனைகளைக் கேட்பதில்லை. மனச் சாட்சியின்படி முடிவுகளை எடுத்தார்.
பிலிமைத்தலாவுக்கு ஆத்திரம் பொங்கியது. ஒருநாள் மன்னனிடம், “உங்கள் நன்மைக்காக நான் கூறும் ஆலோசனைகளை எல்லாம் புறக்கணிக்கிறீர்கள். இது நல்லதல்ல” என்றான்.
“நான் சொல்கிறபடி நடக்க வேண்டியதுதான் உன் கடமை. நீ சொல்கிறபடி எல்லாம் நடப்பது மன்னனின் வேலை அல்ல” என்று பதிலளித்தார், மன்னர்.
இதனால் பிலிமைத்தலாவின் மனம் எரிமலை ஆகியது. “இனி பொறுத்திருப்பதில் பயனில்லை. மன்னனைத் தீர்த்துக் கட்டினால்தான் என் ஆசைகள் நிறைவேறும்” என்று முடிவு செய்தான்.
மன்னனை கொலை செய்ய ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டினான்.

கொலை முயற்சியில் தப்பினார், கண்டி அரசர்
சூழ்ச்சி செய்த மந்திரிக்கு தூக்கு

*****************************

கண்டி மன்னர் விக்கிரமராச சிங்கனை படுக்கையிலேயே படுகொலை செய்ய மந்திரி திட்டம் தீட்டினான். அதில் மன்னர் அதிசயமாக உயிர் தப்பினார்.
மன்னரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய மந்திரி பிலிமைத்தலா, அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை மன்னரின் படுக்கை அறை காவலாளிகளிடம் ஒப்படைத்தான்.
அப்போது படுக்கை காவலாளியாக இருந்தவர்கள், மலேயாவை சேர்ந்தவர்கள். அவர்களை மிரட்டியும், ஆசை காட்டியும் தன் திட்டத்துக்கு இணங்க வைத்தான்.
காவலாளிகளில் சிலர் மந்திரியின் வலையில் சிக்கினாலும், சிலர் மன்னர் மீது விசுவாசம் கொண்டவர்களாக இருந்தார்கள். மந்திரியின் சதித்திட்டத்தை, அவர்கள் மன்னனிடம் கூறிவிட்டார்கள். அதனால், கடைசி நேரத்தில் மன்னர் கொலை செய்யப்படாமல் தப்பினார்.
தூக்கு தண்டனை
மந்திரி பிலிமைத்தலாவின் சதி வேலைகளும், சூழ்ச்சிகளும் மன்னருக்குத் தெரியவந்தன.
ஏற்கனவே மந்திரியின் போக்கு மன்னருக்குப் பிடிக்காமல் இருந்தது. என்றாலும், தான் மன்னராவதற்கு உதவியவன் என்ற காரணத்துக்காக, அவன் செய்த குற்றங்களை மன்னித்து வந்தார்.
இம்முறை தன்னைக் கொலை செய்துவிட்டு, ஆட்சியைக் கைப்பற்ற மந்திரி பிலிமைத்தலா திட்டம் தீட்டியதை மன்னிக்க அவர் தயாராகவில்லை இல்லை. பிலிமைத்தலாவையும், அவனுடன் சேர்ந்து சதி செய்த மற்றும் 6 பேர்களையும் தூக்கில் போடும்படி மன்னர் உத்தரவிட்டார்.
அதன்படி அவர்கள் 1812-ம் ஆண்டு ஜூன் மாதம் தூக்கிலிடப்பட்டனர்.
புதிய மந்திரி
பிலிமைத்தலாவுக்கு பதிலாக எகிலப்பொல என்ற சிங்களவன், புதிய மந்திரியாக நியமிக்கப்பட்டான். உதவி மந்திரியாக மொலிக்கொண்ட என்பவன் பொறுப்பு ஏற்றான்.
தூக்கிலிடப்பட்ட பிலிமைத்தலாவிடம் இருந்த அத்தனை கெட்ட குணங்களும், புதிய மந்திரி எகிலப்பொலவிடமும் இருந்தன. அவனும் வேலைக்காரர்களுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தான். மன்னரை கவிழ்க்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

மறுமணம்
முன்னாள் கண்டி மன்னர் ராசாதிராச சிங்கன்போல, விக்கிரமராச சிங்கனுக்கும் குழந்தை இல்லை! தனக்கு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்று எண்ணிய அவர், மதுரையில் இரண்டு பெண்களை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டார். 1813-ம் ஆண்டு தை மாதத்தில் இந்தத் திருமணம் நடைபெற்றது.
இதற்கிடையே, மந்திரி எகிலப்பொல, மக்களிடம் மன்னன் பெயரைச் சொல்லி ஏராளமாக பணம் சேர்த்தான். இதுபற்றி மன்னருக்கு தகவல் தெரிந்தது. உடனே தன்னை வந்து பார்க்கும்படி, மந்திரி எகிலப்பொலவுக்கு உத்தரவிட்டார்.
ஆனால், அந்த உத்தரவுக்கு எகிலப்பொல கீழ்ப்படியவில்லை. மன்னரை சந்தித்தால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்திருந்தான். எனவே, வெள்ளைக்கார தளபதியிடம் தன் நண்பன் ஒருவனை தூது அனுப்பினான். “மன்னன் விக்கிரமராச சிங்கன் கொடுங்கோல் ஆட்சி செய்கிறார். மக்கள் அவரை வெறுக்கிறார்கள். உடனே நீங்கள் கண்டி மீது படையெடுங்கள். மக்கள் உங்களை வரவேற்பார்கள்” என்று மந்திரியின் நண்பன் வெள்ளைக்கார தளபதியிடம் கூறினான்.
ஆனால் விக்கிரமராச சிங்கனின் வீரத்தையும், ஏற்கனவே கண்டி மீது படையெடுத்துச் சென்று அவரிடம் சரண் அடைய நேரிட்டதையும் வெள்ளைக்கார தளபதி மறந்து விடவில்லை! எனவே கண்டி மீது படையெடுக்க மறுத்துவிட்டார்.
இதனால் ஏமாற்றம் அடைந்த மந்திரி எகிலப்பொல, கண்டியின் பல்வேறு பகுதிகளிலும் மன்னருக்கு எதிராக கலகங்களை தூண்டி விட்டான்.
இதையெல்லாம் மன்னர் அறிந்தார். எகிலப்பொலவை நீக்கிவிட்டு, புதிய மந்திரியாக மொலிக்கொடையை நியமித்தார்.
உளவு பார்த்த வியாபாரிகள்
சில வியாபாரிகள், உளவு வேலையில் ஈடுபடுவதாக மன்னருக்கு தகவல் கிடைத்தது. அதனால், குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளை வெளியேற்றினார்.
இதை அறிந்த எகிலப்பொல, மன்னரைப் பழிவாங்க புதிய திட்டம் வகுத்தான். தடை செய்யப்பட்ட பகுதிக்கு, 10 வியாபாரிகளை அனுப்பி வைத்தான். இதனால் ஆத்திரம் அடைந்த மன்னர் 10 வியாபாரிகளையும் கைது செய்யக் கட்டளையிட்டார். அவர்களுடைய மூக்குகளையும், காதுகளையும் துண்டித்து, அவற்றை மாலையாகக் கோர்த்து கழுத்தில் போட்டு அனுப்பும்படி உத்தரவிட்டார்.
மூக்குகளையும், காதுகளையும் இழந்த 10 பேரும் ஊருக்குத் திரும்பும்போது, 7 பேர் நடுவழியிலேயே இறந்து விட்டனர். மீதி மூன்று பேர் ஆங்கிலேய தளபதிகளிடம் சென்று, கண்டி மன்னர் எங்கள் மூக்கையும், காதுகளையும் அறுத்து விட்டார் பாருங்கள்” என்று முறையிட்டு கதறி அழுதனர்.
“கண்டி மன்னர் கொடுங்கோலர் என்று ஏற்கனவே சொன்னேனே! நீங்கள் இப்போதாவது அதை நம்புங்கள். கண்டி மீது படை எடுங்கள்” என்று வெள்ளையர்களுக்கு தூபம் போட்டான், எகிலப்பொல.
வெள்ளையர்கள் இதுபற்றி ஆலோசனை நடத்தினார்கள். கண்டி மீது படையெடுக்க முடிவு செய்தார்கள்.
(கி.பி. 1739-ல், ஒரு வெள்ளையரின் காதை ஸ்பானிஷ் மாலுமி அறுத்துவிட்டான் என்பதால், ஸ்பெயின் மீது இங்கிலாந்து படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.)
கண்டி ராஜ்ஜியத்தின் சகல ரகசியங்களையும் வெள்ளையர்களிடம் எகிலப்பொல தெரிவித்தான். எந்தெந்த வழிகளில் சென்றால், கண்டியை சுலபமாகப் பிடிக்கலாம் என்பதையும் விளக்கமாகக் கூறினான்.
அதன்படி கொழும்பு, காலி, மட்டகளப்பு, திரிகோணமலை ஆகிய இடங்களில் இருந்து, வெள்ளையர் படைகள் கண்டியை நோக்கி விரைந்தன.
“சிங்கள மக்களை தமிழ் மன்னர் விக்கிரமராச சிங்கன் கொடுமை செய்கிறார். அவரிடம் இருந்து மக்களைக் காப்பாற்றவே, கண்டி மீது படையெடுத்திருக்கிறோம்” என்று வெள்ளையர்கள் போர்ப்பிரகடனம் வெளியிட்டனர்.

மன்னர் பிடிபட்டார் !
ராணுவம் சுற்றி வளைத்தது

************************

பல்வேறு திசைகளில் இருந்தும் கண்டியை நோக்கிச் சென்ற வெள்ளையர் படைகள், ஒவ்வொரு இடமாக கைப்பற்றிக் கொண்டு கண்டியை நெருங்கின.
கண்டியின் மந்திரியாக இருந்த மொலிக்கொடை, வெள்ளையர் கை ஓங்கியிருப்பதைக் கண்டு கொண்டு, 1815 பிப்ரவரி மாதம் 8-ந் தேதி வெள்ளையரிடம் சரண் அடைந்தான். தன்னிடம் இருந்த கொடி, பெற்ற விருதுகள் ஆகியவற்றையும் அவர்களிடம் ஒப்படைத்தான்.
கண்டியை வெள்ளையர் படைகள் நெருங்கி வந்து கொண்டிருப்பதை அறிந்த மன்னர் விக்கிரமராச சிங்கன், இம்முறை வெள்ளையரை தோற்கடிப்பது இயலாத காரியம் என்று உணர்ந்து கொண்டார். ‘சில காலம் தலைமறைவாக இருப்போம். முன்போல ரகசியமாகப் படை திரட்டி வெள்ளையரை எதிர்ப்போம்’ என்று முடிவு செய்தார்.
தலைநகரை விட்டு ரகசியமாக குடும்பத்துடன் வெளியேறினார் மெதமகாநுவரா என்ற இடத்துக்குச் சென்று, யாரும் எளிதாக கண்டுபிடிக்க முடியாத ஓர் இடத்தில் மறைந்து கொண்டார்.
கண்டி அரண்மனையைக் கைப்பற்றிக்கொண்ட வெள்ளையர்கள், அங்கு மன்னர் இல்லாததைக் கண்டு திகைத்தனர். எப்படியும் அவரைக் கண்டுப்பிடித்து கைது செய்ய வேண்டும் என்று, ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டது.
ராணுவத்தினர் பல குழுக்களாகப் பிரிந்து, நாலாபுறமும் தேடிச்சென்றனர்.
மெதமகாநுவராவில் மன்னர் ஒளிந்திருப்பதாக, ஒற்றர்கள் மூலம் வெள்ளையர்களுக்கு தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியைச் சுற்றிலும் ராணுவத்தினர் துப்பாக்கியுடன் நிறுத்தப்பட்டனர். மன்னர் தப்பிச் சென்று விடாதபடி, இரவு – பகலாகக் கண்காணிக்கவும், காட்டுப்பகுதியில் தேடிப்பார்க்கவும் உத்தவிடப்பட்டது.
துப்பு கிடைத்தது
இந்த சமயத்தில் ஒரு சிறுவன் அந்தப் பக்கமாக வந்தான். ராணுவத்தினரைப் பார்த்து திடுக்கிட்டான். ஓடப்பார்த்த அவனை, ராணுவத்தினர் பிடித்துக்கொண்டனர்.
“கண்டி மன்னரை எங்காவது பார்த்தாயா?” என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்கள்.
பயந்துபோன சிறுவன், “பார்த்தேன்” என்று ஒப்புக்கொண்டான்.
“அவர் ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டு. இல்லாவிட்டால் சுட்டுக் கொன்றுவிடுவோம்” என்று ராணுவத்தினர் மிரட்டினார்கள். சிறுவன் அழுதுகொண்டே, “அந்த இடத்தைக் காட்டிவிடுகிறேன். என்னை ஒன்றும் செய்யாதீர்கள்” என்று கூறினான்.
ராணுவத்தினர், சிறுவனை அழைத்துக்கொண்டு, அவன் காட்டிய திசையில் நடத்தினர்.
ஓர் இடத்திற்கு வந்ததும், சிறுவன் நின்றான். ஒரு மரத்தைச் சுட்டிக்காட்டி, அதோ அந்த மரத்துக்கு அருகே உள்ள வீட்டில்தான் அரசர் இருக்கிறார்” என்று கூறினான்.
அந்த வீட்டை வெள்ளையர் நெருங்கினர். ஒரு ராணுவ வீரன் கையில் ஈட்டியுடன் வாசலில் காவல் புரிவதைக் கண்டனர்.
பாய்ந்து சென்று, அவனை அடித்து வீழ்த்தி, ஒரு மரத்தில் கட்டிப்போட்டனர்.
பிறகு கையில் துப்பாக்கிகளைப் பிடித்தபடி திபு திபு என்று உள்ளே நுழைந்தனர்.
ஒரு அறை, உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. அந்தக் கதவை பெரிய இரும்பு உலக்கையால் உடைந்து தகர்த்தனர்.
ராணுவத்தின் பிடியில் மன்னர்
உள்ளே விக்கிரமராச சிங்கன் குடும்பத்தாருடன் இருந்தார். அவர்களை, ராணுவம் சூழ்ந்து கொண்டது.
“உங்களிடம் உள்ள ஆயுதங்களை எல்லாம் ஒப்படையுங்கள்” என்று ராணுவ தளபதிகள் கூறினர்.
உடனே மன்னர் தன்னிடம் உள்ள வெள்ளிப்பிடி போட்ட கைத்துப்பாக்கிகளையும், கத்திகளையும் வீசி எறிந்தார். ஆனால், தன் இடையில் எப்போதும் வைத்திருந்த தங்க உடைவாளை மட்டும் கொடுக்க மறுத்துவிட்டார்.
மன்னரின் மனைவிகளையும் ராணுவத்தினர் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அணிந்திருந்த நகைகளை ஆத்திரத்தோடு அறுத்தனர். ராணிகளின் காதில் அணிந்திருந்த வைரக் கம்மல்களைப் பிடித்து இழுத்தபோது, காத்து அறுத்து ரத்தம் வடிந்தது.
அப்போது மூத்த தளபதி அங்கு வந்து, “இவர் இதுநாள் வரை மன்னராக இருந்தவர். அவருடன் இருப்பவர்கள் அரச குடும்பத்தினர். மேலும், இவர்கள் நம்மை எதிர்த்து போர் புரியவில்லை.எனவே, இவர்களை சித்ரவதை செய்யக்கூடாது. உரிய மரியாதையுடன் நடத்தவேண்டும்” என்றார்.
அந்த மாலை, டொயிலி என்ற வெள்ளைக்கார உயர் தளபதி தங்கி இருந்த இடத்துக்கு மன்னர் குடும்பத்தினர் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை டொயிலி மரியாதையுடன் நடத்தினார். “உங்கள் எவருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாது” என்று மன்னரிடம் அவர் உறுதிமொழி கொடுத்தார்.
அன்றிரவு, ஒரு கூடாரத்தில் அரச குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டனர். விடிய விடிய கூடாரத்தைச் சுற்றி ராணுவத்தினர் காவல் புரிந்தனர்.
மறுநாள் அரச குடும்பத்தினர் கொழும்பு நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தங்குவதற்கு பெரிய வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

நாடு கடத்தப்பட்ட கண்டி மன்னர்
வேலூர் சிறையில் 16 ஆண்டுகள் கழித்தார்

********************************************

கல்லறையை கண்டுபிடித்து மணிமண்டபம் கட்டினார், கருணாநிதி
கண்டி மன்னர் விக்கிரமராச சிங்கனை கொழும்பு நகரில் சில நாட்கள் வீட்டுக் காவலில் வெள்ளையர்கள்கள் வைத்திருந்தனர்.
அப்போது, கண்டி ராஜ்ஜிய அரசுரிமையை இங்கிலாந்து அரசுக்கு எழுதிக் கொடுக்கும்படி அவரிடம் ஆங்கிலேய தளபதிகள் வற்புறுத்தினர். ‘இனி வேறு வழியில்லை; சாசனத்தை எழுதித்தர மறுத்ததால், எல்லோரையும் கொன்று விடுவார்கள் என்று விக்கிரமராச சிங்கன் கருதினார்.
தமிழில் கையெழுத்து
எனவே, வெள்ளையர்கள் கூறியபடி சாசனம் தயாரிக்கப்பட்டது. அதில், “விக்கிரமராச சிங்கன் என்கிற கண்ணுச்சாமி” என்று தமிழில் கையெழுத்துப் போட்டார்.
கண்டி அமைச்சர்களாக இருந்த சிங்களவர்களும் தமிழில்தான் கையெழுத்திட்டார்கள்.
சிங்களர் உள்பட அனைவரும் தமிழில் கையெழுத்துப் போட்டிருப்பதால், அப்போது கண்டியில் தமிழ் தான் ஆட்சி மொழியாக இருந்திருக்கிறது என்பது புலனாகின்றது.
கண்டி மன்னர் எழுதிக் கொடுத்த சாசனம், இன்னமும் இலங்கையில் உள்ள ஆவணக் காப்பகத்தில் பத்திரமாக உள்ளது.
வேலூரில் சிறை வாசம்
சில நாட்கள் கழித்து, விக்கிரமராச சிங்கனை இலங்கையில் இருந்து நாடு கடத்த வெள்ளையர் முடிவு செய்தனர்.
அதன்படி, அவரையும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் கொழும்பில் இருந்து ‘கோவன் வாலிஸ்’ என்ற கப்பலில் அனுப்பி வைத்தனர். இந்தக் கப்பல் 24-1-1816 -ல், கொழும்பில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டது.
கப்பல் சென்னை போய்ச் சேர்ந்தபின், அங்கிருந்து வேலூருக்குக் கொண்டு போனார்கள். வேலூர் கோட்டையில், முன்பு திப்புசுல்தானின் மகன்கள் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்தில், விக்கிரமராச சிங்கனையும், அவர் மனைவிகளையும், குடும்பத்தினரையும் அடைத்து வைத்தார்கள்.
16 ஆண்டுகள்
கண்டியில், மிகப்பெரிய அரண்மனையில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து 18 ஆண்டுகள் ஆட்சி நடத்திய விக்கிரமராச சிங்கன், வேலூர் சிறையில் 16 ஆண்டுகள் கைதியாக காலம் கழித்தார்.
இறுதிக்காலத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 1832 ஜனவரி 30-ந்தேதி மரணம் அடைந்தார்.
அவர் உடலை, பாலாற்றங்கரையில் வெள்ளையர்கள் புதைத்தனர். கல்லறை எழுப்பி, கல்வெட்டு ஒன்றையும் நட்டனர்.
சில காலத்துக்குப் பிறகு மன்னரின் மனைகள், மகன், கொள்ளுபேரன் ஆகியோரும் மரணம் அடைந்தனர். அவர்களுடைய உடல்களும், விக்கிரமராச சிங்கன் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டன.
காலம் செல்லச்செல்ல, அந்த இடத்தில் செடி – கொடிகள் வளர்ந்தன; புதர்கள் மண்டின. கல்லறைகளை கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு அந்தப் பகுதியே காடுபோல் காட்சி அளித்தது.

முத்து மண்டபம்

முதல் – அமைச்சர் கருணாநிதி, கண்டியின் கடைசி தமிழ் மன்னனை கவுரவிக்க எண்ணினார். மன்னனின் கல்லறையை கண்டுப்பிடிக்கும்படி கட்டளையிட்டார்.
அதிகாரிகள் காடுமேடு எல்லாம் தேடி அலைந்து, மன்னரின் கல்லறையையும், அவர் குடும்பத்தாரின் கல்லறைகளையும் கண்டுப்பிடித்தனர்.
அந்த இடத்தில், ரூ.7 லட்சம் செலவில் தமிழக அரசு சார்பில் முத்து மண்டபம் அமைக்க கருணாநிதி ஏற்பாடு செய்தார். இந்த முத்து மண்டபத்தை அவர் 1990 -ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி திறந்து வைத்தார்.
விழாவில் கருணாநிதி பேசுகையில், “இதற்கு முத்து மண்டபம் என்று பெயர் வைக்கப்பட்டதற்கு காரணமே, பாலாற்றங்கரையில் இந்த முத்தை தேடிப்பிடித்துக் கண்டுப்பிடித்தோம். அந்த முத்தை பாதுகாக்க, இந்த மண்டபத்தை கட்டியுள்ளோம்” என்றார்.
பத்திரப்பதிவு அலுவலகம்

வேலூர் கோட்டையில் விக்கிரமராச சிங்கன் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்தில், இப்போது பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படுகிறது.
முத்து மண்டப வாசலில் அமைக்கப்பட்டுள்ள பலகையில், கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:-
“விக்கிரமராச சிங்கன், இலங்கையில் சிறப்பாக ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னன். ஆங்கில அரசு இம்மன்னன் மீது 4 முறை போர் தொடுத்து, இறுதியில் மன்னரும் பட்டத்தரசிகளும் கப்பல் மூலம் தமிழகம் கொண்டு வரப்பட்டு, 1816 -ல் வேலூர் கோட்டையில் உள்ள (தற்போதைய பதிவு அலுவலகம்) அறையில் 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டனர்.

விக்கிரமராச சிங்கன் 30-1-1832 -ல் மரணம் அடைந்து, அவரது கல்லறை இங்கே அமைக்கப்பட்டுள்ளது. 1843 -ல் மரணம் அடைந்த மகன் ரங்கராசா கல்லறையும், மனைவி ராசலட்சுமி தேவி கல்லறையும், மன்னரின் பேரன் ரசிம்மராசா கல்லறையும் அருகில் உள்ளன. 4,5,6 -வது கல்லறைகள் மற்ற மனைவிகளுடையது. 7 -வது கல்லறை விக்கிரமராச சிங்கரின் பட்டத்தரசி சாவித்திரி தேவியுடையது ஆகும்.”
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், கண்டி மன்னன் பயன்படுத்திய சதுரங்கப் பலகைகள், யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட சதுரங்கக்காய்கள், சில போர்க்கருவிகள் ஆகியவற்றை இப்போதும் காணலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *